காஞ்சிபுரம்
குன்றத்தூர் அருகே கண்ணாடி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி
|குன்றத்தூர் அருகே கண்ணாடி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
ஐதராபாத்தில் இருந்து 2 லாரிகள் கண்ணாடிகளை ஏற்றி கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தது. நேற்று மதியம் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவர் நாகராஜின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கண்ணாடி அனைத்தும் உடைந்து சாலையில் கொட்டியது. இதனால் சர்வீஸ் சாலை முழுவதும் கண்ணாடி துண்டுகளாக இருந்தது. லாரியை ஓட்டி வந்த நாகராஜ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த நாகராஜை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சர்வீஸ் சாலை முழுவதும் கண்ணாடி துண்டுகளாக இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.