திருவாரூர்
இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
|இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
லெட்சுமாங்குடி சாலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
லெட்சுமாங்குடி சாலை
கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி சாலை திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி- கல்லூரி வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
விபத்துகள் ஏற்பட வாய்ப்பு
போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் லெட்சுமாங்குடி கடைவீதி தொடங்கி பனங்காட்டாங்குடி வரை பகல் நேரம் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. சில நேரங்களில் இருளான இடத்தில் நிற்கக்கூடிய மாடுகள், திடீரென சாலையில் துள்ளி குதித்துக்கொண்டு ஓடுகின்றது. அப்போது, வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை
லெட்சுமாங்குடி சாலையில் அடிக்கடி மாடுகள் சுற்றித்திரிவதால் கடந்த சில மாதங்களாக வாகனங்கள் எதிர்பாராத விதமாக மோதியதில் சில மாடுகள் இறந்தும், சில மாடுகள் காயம் அடைந்தும் உள்ளன. இதனால் மனித உயிர்கள் பறி போவதுடன் மாடுகளும் இறக்க நேரிடுகிறது. எனவே சாலையில் இரவு நேரத்தில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.