செங்கல்பட்டு
நந்திவரம் அருகே சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
|நந்திவரம் அருகே சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் அடிக்கடி விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நந்திவரம் புற்றுக்கோவில் பெட்ரோல் நிலையம் எதிரே உள்ள கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் அந்த சாலை வழியாக செல்லும் ஏராளமான வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
ஒரு மணி நேரம் மழை பெய்தாலே இந்த இடத்தில் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுவதால் மழை காலத்தில் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம், எனவே இந்த இடத்தில் சாலையில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தரமாக தமிழக நெடுஞ்சாலை துறையும், நகராட்சி நிர்வாகமும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.