திருவள்ளூர்
திருத்தணியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
|திருத்தணியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் லேசான பனி மூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வந்தது. இந்தநிலையில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கே.ஜி.கண்டிகை, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, மத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று பனிபொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் திருத்தணி அரக்கோணம் சாலை, திருத்தணி சித்தூர் சாலை, மற்றும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனங்களில் அதிகாலை நேரங்களில் சென்றவர்கள் கடுமையான பனிமூட்டத்தால் அவதியடைந்தனர்.
ஒரு சில இடங்களில், சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். திருத்தணி ரெயில் நிலைய தண்டவாளத்திலும் பனிமூட்டம் சூழ்ந்ததால் ரெயில்களும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றன.