கோயம்புத்தூர்
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
|வடபுதூர்-சிங்கையன்புதூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு
வடபுதூர்-சிங்கையன்புதூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கல்குவாரி லாரிகள்
கிணத்துக்கடவு அருகே வடபுதூரில் இருந்து சிங்கையன்புதூர் செல்லும் சாலை உள்ளது. சொக்கனூர், முத்துக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் வடபுதூர் செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.
அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் பாரம் ஏற்றும் லாரிகள் அனைத்தும், சிங்கையன் புதூர் சாலைக்கு வந்து, அங்கிருந்து கேரளா செல்கின்றன.
மழைநீர் தேங்கி நிற்கிறது
இந்த சாலையில் அதிக அளவு பாரங்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்வதால், குறிப்பிட்ட தூரத்திற்கு ஆங்காங்கே சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக, அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள், விவசாயிகள் சிங்கையன்புதூரில் இருந்து வடபுதூருக்கு செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர்.
கோரிக்கை
அந்த பழுதடைந்த சாலையில் இரவு நேரங்களில் வரும்போது, சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் குழி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
அதேபோல் சாலையில் செல்லும் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்த படி செல்வதால், பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பழுதடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.