செங்கல்பட்டு
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி - கலெக்டர் ஆய்வு
|கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் புதிதாக கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் புறநகர் பஸ் நிலையம் எதிரில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சென்னை மற்றும் கோயம்பேடு பகுதியில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தண்ணீரில் ஊர்ந்து சென்றன.
இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜி.எஸ்.டி சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கு உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை பெய்யும் போது கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் மழை வெள்ளம் தேங்குவது தொடர்கிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.