பெரம்பலூர்
புகைப்படம்-வீடியோ எடுக்கும் இளைஞர்களால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
|புகைப்படம்-வீடியோ எடுக்கும் இளைஞர்களால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகம் செல்லும் சாலையில் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக மாலை நேரத்தில் செல்போன், கேமராக்கள் மூலம் தங்களை புகைப்படம், வீடியோ எடுத்து கொண்டிருக்கின்றனர். அதில், சில இளைஞர்கள் சாலையில் நின்று நடனமாடி வீடியோ எடுக்கின்றனர். இதனால் அந்த சாலை வழியாக செல்லும் அரசு அலுவலர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை அந்த வழியாக செல்லும் அரசுத்துறை அலுவலர்களும், மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு செல்லும் போலீசாரும் கண்டும், காணாதது போல் சென்று விடுகின்றனர். இதனால் தற்போது அந்த சாலை இளைஞர்கள் புகைப்படம், வீடியோ எடுக்கும் இடமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.