திருச்சி
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
|போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
திருச்சி மாநகரில் தற்போது பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி, சாலை போடும் பணியும் நடைபெறுகிறது. இந்த பணிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி நடைபெறும். இந்த நிலையில் நேற்று காலை திருச்சி சாஸ்திரி ரோட்டில் பகல் நேரத்தில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. இதனால் சாஸ்திரி ரோடு, கோகினூர் ரோடு, தில்லை நகர் ரோடு ஆகிய பகுதிகளில் காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் நேற்று வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், அவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்படுத்த மிகுந்த சிரமம் அடைந்தனர். இதையடுத்து மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர். எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் பகல் நேரத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.