சென்னை
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; மெக்கானிக் உள்பட 2 பேர் கைது
|ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்பாக மெக்கானிக் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெருங்களத்தூர், ராஜாஜி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 36). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது, அவர் தன்னுடைய மோட்டார்சைக்கிளை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, அவர் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் முக கவசம் அணிந்து கொண்டு ஆஸ்பத்திரியின் பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர், அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் செங்குன்றம், விலாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த முருகன் (36) என்பது தெரியவந்தது. செங்குன்றம் பகுதியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருவதும், வேலை இல்லாத நேரத்தில் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி மற்றும் சென்னையில் பல இடங்களை குறிவைத்து திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், திருடிய பைக்குகளை அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் (49) என்பவர் மூலம் உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார்சைக்கிளும், மோட்டார்சைக்கிள்களின் உதிரி பாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.