சென்னை
அண்ணாநகரில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி - மேலும் 2 பேர் படுகாயம்
|அண்ணாநகரில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலியானார்.
கீழ்ப்பாக்கம் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). இவர் கொத்தவால்சாவடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ்வரன் (27), என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவரது உறவினர் மகள் சாலினி (21) என்பவர் அண்ணாநகரில் உள்ள கல்லூரியில் படித்து வரும்நிலையில், அவரை தினமும் கல்லூரியில் விக்னேஷ்வரன் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது தங்கையை கல்லூரியில் விடுவதற்கு அண்ணா நகர் சிந்தாமணி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த பவுன்குமார் (21) என்பவர் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் விக்னேஷ்வரன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடன் வந்த கல்லூரி மாணவி சாலினிக்கு கால் முறிவு ஏற்பட்டது. பவுன்குமாரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி சாலினி, விபத்து ஏற்படுத்திய பவுன்குமார் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகர் சேர்ந்தவர் கவிதா (வயது 44). இவர் சென்னை ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மாதவரம் ரவுண்டானா நோக்கி வந்த போது, புழல் ரெட்டேரி 200 அடி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதமாக செத்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.