கடலூர்
சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தனியார் நிறுவன மேலாளர் பலி
|சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலியானார்.
சிதம்பரம்,
நேருக்குநேர் மோதல்
சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் கேசவன் மகன் முத்துக்குமரன் (வயது 45). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை முத்துக்குமரன் சிதம்பரம் வண்டிக்கேட் கடலூர் செல்லும் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், முத்துக்குமரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.
தனியார் நிறுவன மேலாளர் பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முத்துக்குமரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதனிடையே இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான முத்துக்குமரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து முத்துக்குமரனின் மனைவி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.