திருவள்ளூர்
பொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மீன் வியாபாரி சாவு
|பொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற மீன் வியாபாரி முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பட்டு தாலுகா கோணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செயன். (வயது 65). மீன் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தில் மீன்களை விற்றுவிட்டு தனது கிராமத்திற்கு செல்ல நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக பொதட்டூர்பேட்டை அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சிவகிரி (18) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரிடம் 'லிப்ட்' கேட்டு மீன் வியாபாரி தனஞ்ஜெயன் பின்னால் ஏறிக்கொண்டார்.
அந்த பகுதியில் உள்ள ஏரிக்கடை வழியே செல்லும்போது இவர்களுக்கு முன்னால் கொடிவலசை காலனியைச் சேர்ந்த சுரேஷ் பாபு (50) என்பவர் தனது நண்பரான பெத்தப்பன் என்பவரை ஏற்றிக்கொண்டு சென்றார்.
அப்பொழுது சிவகிரி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சுரேஷ்பாபு சென்ற மோட்டார் சைக்கிள் மீது பின்னால் மோதியது. இதில் சிவகிரியின் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த மீன் வியாபாரி தனஞ்செயன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தனஞ்செயன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இந்த விபத்து குறித்து சுரேஷ்பாபு பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற மீன் வியாபாரி விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.