செங்கல்பட்டு
கேளம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தச்சுத்தொழிலாளி பலி
|கேளம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் சாத்தங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 30). கேளம்பாக்கம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் தச்சுத்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் மதுரை.
அய்யனாருக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண்டு ஆகிறது. இவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்று மதியம் அய்யனார் தனது 7 மாத கர்ப்பிணி மனைவிக்கு மதிய உணவு வாங்க நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிகொண்டு கேளம்பாக்கம் சென்றார்.
உணவு வாங்கிகொண்டு கேளம்பாக்கம் அருகே வீராணம் சாலையில் திரும்பும்போது திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அய்யனார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அய்யனார் சாலையில் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் நீண்ட நேரமாக சாலை ஓரத்தில் அய்யனார் உடல் மீட்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விபத்து ஏற்படுத்தியவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த சைன் அப்துல்லா(28) என்பதும், கேளம்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
விபத்து நடத்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி வெளியானது. சைன் அப்துல்லாவுடன் மோட்டார் சைக்கிளில் மற்றொருவரும் வந்துள்ளார். அவர் தப்பிச்சென்று விட்டார் என்பது தெரியவந்தது. சைன் அப்துல்லாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.