சென்னை
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; டீக்கடைக்காரர் சாவு
|காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் டீக்கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் தாமல்வார்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 54). இவர் காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் குமார் தனது நண்பரான லட்சுமி காந்தன் (65) என்பவருடன் காஞ்சீபுரம் அடுத்த தென்னாங்கூரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள புஞ்சை அரசன் தாங்கள் என்னும் இடத்தில் சென்றபோது காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசிக்கு சென்ற லாரி குமார் சென்ற மோட்டர் சைக்கிள் மீது மோதியது.
இதில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த லட்சுமி காந்தன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராமசந்திரா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.