திருச்சி
அவிநாசியில் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் சமயபுரத்தில் மீட்பு
|அவிநாசியில் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் சமயபுரத்தில் மீட்கப்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பெரிய பனையூரை சேர்ந்த பழனிச்சாமியின் மகன் வெம்புடி (வயது 27). இவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தங்கி அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். தினமும் கடைக்கு மோட்டார் சைக்கிளில் அவர் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து, அவிநாசி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சமயபுரம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாமல் வந்த மோட்டார் சைக்கிளுக்கு அபராதம் விதித்துள்ளார். இந்நிலையில், அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான வெம்புடிக்கு அபராதம் விதித்ததற்கான குறுஞ்செய்தி அவரது செல்போனுக்கு சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து வெம்புடி அவிநாசி போலீஸ் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவிநாசி போலீசார் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு அது பற்றி கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவிநாசியில் இருந்து வந்த போலீசாரிடம், சமயபுரம் போலீசார் மோட்டார் சைக்கிளையும், அதனை ஓட்டி வந்த இருங்களூரை சேர்ந்த ரூபனையும் (28) நேற்று ஒப்படைத்தனர்.