திண்டுக்கல்
மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
|திண்டுக்கல் அருகே, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
திண்டுக்கல் சோலைஹால் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் நிக்கி மைக்கேல் ஹென்றி (வயது 27). இவர், தனியார் அறக்கட்டளையில் பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், திண்டுக்கல் பாலமரத்துப்பட்டி அன்னை நகர் முதல் தெருவில் வசிக்கிற தனது உறவினர் லியோ ரொசாரியா வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டு, இரவில் அங்கு தங்கி விட்டு நேற்று காலையில் எழுந்து பார்த்தார்.
அப்போது தான் நிறுத்தியிருந்த இடத்தில் மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது அன்னை நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு கடையின் முன்பு அவரது மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்தது. மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற மர்ம நபர்கள், அதனை தீ வைத்து எரித்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை முடுக்கி விட்டுள்ளனர்.