காஞ்சிபுரம்
மதுராந்தகம் அருகே விபத்து மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; பெண் ஊழியர் பலி - மகன் கண் எதிரே பரிதாபம்
|மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்று கொண்டு இருந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் லாரி மோதி பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி குருவம்மாள் (வயது 38). அத்திமானத்தில் உள்ள தனியார் குழாய் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக தனது மகன் விக்னேஸ்வரனுடன் (21) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
செங்கல்பட்டு வழியாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அத்திமானம் என்ற இடத்தில் சாலையை கடக்க மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டு இருந்த டாரஸ் லாரி அவர்கள் மீது மோதியது.
இதில் குருவம்மாள் தூக்கி வீசப்பட்டு தனது மகன் கண் எதிரே சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த விக்னேஸ்வரன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஏழுமலை படாளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.