< Back
மாநில செய்திகள்
மாடு மீது மோட்டார்சைக்கிள் மோதி தூக்கி வீசப்பட்டனர்: கார் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு - மற்றொருவர் படுகாயம்
சென்னை
மாநில செய்திகள்

மாடு மீது மோட்டார்சைக்கிள் மோதி தூக்கி வீசப்பட்டனர்: கார் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு - மற்றொருவர் படுகாயம்

தினத்தந்தி
|
8 Nov 2022 2:50 PM IST

சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட என்ஜினீயரிங் மாணவர், கார் சக்கரத்தில் சிக்கி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவரதன் (வயது 21). இவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், அதே கல்லூரியில் படிக்கும் சகமாணவரான சவுத்ரி (22) என்பவருடன் மாமல்லபுரம் நகரை சுற்றி பார்க்க மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றார். பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தனர். அதன்பிறகு மீண்டும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வடநெம்மேலி என்ற இடத்தில் வந்தபோது, சாலையின் குறுக்கே வந்த பசுமாடு மீது இவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த விஷ்ணுவரதன் ரத்தவெள்ளத்தில் சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது. இதில் விஷ்ணுவரதன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் வந்த மாணவர் சவுத்ரி, சர்வீஸ் சாலையில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்சு மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்