தேனி
மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
|பெரியகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 50). இவர், மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், வேலை முடிந்து மதுரையில் இருந்து பெரியகுளத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பெரியகுளம்- தேனி சாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தென்கரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.