சென்னை
செங்குன்றம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி டாக்டர் பலி - பெண் டாக்டர் படுகாயம்
|செங்குன்றம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டாக்டர் பலியானார். பெண் டாக்டர் படுகாயம் அடைந்தார்.
திருச்சியை சேர்ந்தவர் கோவிந்த். இவருடைய மகன் நிஷாந்த் (வயது 30). இவர், சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வந்தார்.
இதேபோல் தர்மபுரியை சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவருடைய மகள் பிரீத்தி (25). இவரும், அதே இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்தனர்.
நேற்று மாலை இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த டாக்டர் நிஷாந்த், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதில் படுகாயம் அடைந்த பெண் டாக்டர் பிரித்தியை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் புலேந்திரபாபு மற்றும் போலீசார் பலியான நிஷாந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.