சென்னை
சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்: தந்தை கண் எதிரே 6 வயது மகன் பலி
|மணலி சாலையில் சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை கண் எதிரே 6 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை திருவொற்றியூர் சரஸ்வதி நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூன். அதே பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். தொழிற்சாலையில் தொடர்ந்து இரவு நேரங்களில் வேலை செய்து வந்ததால் பகல் நேரத்தில் பகுதிநேர வேலையாக தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்திலும் உணவு டெலிவரி கொடுக்கும் வேலை செய்து வந்தார்.
இரவு பணியை முடித்துவிட்டு நேற்று காலையில் வீட்டுக்கு வந்த அர்ஜூன், வழக்கம் போல மணலியில் உணவு டெலிவரி செய்வதற்காக தன்னுடைய 3-வது மகன் புகழ்குமரனை (வயது 6) உடன் அழைத்துச்சென்றார். உணவு டெலிவரி முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் மணலி விரைவு சாலைவழியாக சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அருகே வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அர்ஜூன் தூக்க கலக்கத்தில் இருந்ததால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை தடுப்பு சுவரில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த புகழ்குமரன், தந்தை கண் எதிரேயே அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான் . படுகாயம் அடைந்த அர்ஜூன், திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.