< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

தினத்தந்தி
|
12 Aug 2023 1:56 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

கும்மிடிப்பூண்டி

பொன்னேரி அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன் (வயது 24). கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் லேத் பட்டறையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 8-ந் தேதி இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தனஞ்செழியன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் அவரது நண்பர் ராகுல் (22) என்பவர் உடன் அமர்ந்து சென்றார்.

கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி ஒன்று திடீரென பிரேக் போட்டதால் எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற தனஞ்செழியன் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற நண்பர் ராகுல் எவ்வித காயம் இன்றி உயிர் தப்பினார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல கும்மிடிப்பூண்டி அடுத்த பண்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்த முதியவர் ஏழுமலை (61). இவர் கடந்த 9-ந் தேதி வேற்காடு அருகே சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து சிசிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த இருவேறு விபத்துகள் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்