புதுக்கோட்டை
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் சாவு
|அரிமளம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். நண்பர் படுகாயமடைந்தார்.
நண்பர்கள்
புதுக்கோட்டை நரிமேடு பெரியார் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அபிபுல்லா (வயது 20). புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் (21). இருவரும் நண்பர்கள்.
இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ராயவரத்தில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு புதுக்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அரிமளம் அருகே முனசந்தை விளக்கு ரோடு அருகில் வந்த போது சாலையோரத்தில் நின்ற மரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
வாலிபர் சாவு
இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் முகமது அபிபுல்லா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். அபுதாஹிர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து முகமது அபிபுல்லா தந்தை மொய்தீன் அப்துல் காதர் கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.