< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; அணு விஞ்ஞானி சாவு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; அணு விஞ்ஞானி சாவு

தினத்தந்தி
|
18 Nov 2022 4:31 AM GMT

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்பாக்கம் அணு விஞ்ஞானி பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தவர் ரமேஷ் (வயது 55). இவர், கல்பாக்கம் அடுத்த அணுபுரத்தில் உள்ள அணுவாற்றல் ஊழியர் குடியிருப்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஒரு வீட்டில் தனது மனைவி விஜயதுர்காவுடன் வசித்து வந்தார். இவர்களுைடய ஒரே மகனான சிவசுப்பிரமணியன் (25) ஆமதாபாத் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.

நேற்று அணு விஞ்ஞானி ரமேஷ் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் நோக்கி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அணுபுரம் நுழைவு வாயில் அருகே எதிர் திசையில் திருக்கழுக்குன்றத்தில் இருந்து சதுரங்கப்பட்டினம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் ரமேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அணுபுரம் அணுவாற்றல் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சதுரங்கப்பட்டினம் போலீசார், ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ரமேஷின் மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக நொறுங்கியது. அவர் மீது மோதிய காரின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. ரமேஷின் மனைவி விஜயதுர்கா அளித்த புகாரின் பேரின் போலீசார் கார் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்