செங்கல்பட்டு
மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; பெண் பலி
|மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
கார்- மோட்டார் சைக்கிள் மோதல்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்காரன். இவரது மனைவி லட்சுமி (வயது 60). இவர்கள் இருவரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் நீரிழிவு நோய்க்கு மாத்திரை வாங்குவதற்காக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிச்சைக்காரன் ஓட்டி சென்றார். கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அருகே செல்லும்போது பின்னால் வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதில் கணவர் கண் எதிரிலேயே மனைவி லட்சுமி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பிச்சைக்காரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்தில் உயிரிழந்த லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இது குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கிளாம்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.