< Back
மாநில செய்திகள்
மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருட்டு
திருப்பூர்
மாநில செய்திகள்

மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருட்டு

தினத்தந்தி
|
8 Jun 2023 10:32 PM IST

மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மின் தடை

'வீட்டுக்கு வீடு மோட்டார்சைக்கிள் கட்டாயம் என்ற நிலையே உள்ளது. ஆனால் பல வீடுகளில் வீட்டுக்குள் வண்டியை நிறுத்தும் வசதி இல்லாததால் சாலையோரங்களிலேயே நிறுத்தி வருகின்றனர். சமீப காலங்களாக அவ்வாறு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கணியூர், காரத்தொழுவு பகுதிகளில் இரவு நேரங்களில் இவ்வாறு வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையை சாதகமாக்கி திருடர்கள் கைவரிசை காட்டுகிறார்களா? அல்லது திருடுவதற்காகவே மின்தடையை உருவாக்குகிறார்களா? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் முக்கிய சாலையில் உள்ள உணவகத்துக்கு முன் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிடச்சென்றவர் திரும்பி வந்து பார்க்கும் போது மோட்டார்சைக்கிள் காணாமல் போயிருந்தது. இதுபோல அரசு ஆஸ்பத்திரிக்கு முன் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே போய் டாக்டரை பார்த்து விட்டு திரும்பி வருவதற்குள் மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை அபேஸ் செய்திருந்தனர்.இதுபோல இரவு பகல் பாராமல் மடத்துக்குளம், கணியூர் காவல் நிலைய எல்லைகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்று வருகிறது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றால் புகாரை பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வாகனங்களை பறிகொடுத்தவர்கள் காப்பீட்டுக்காக விண்ணப்பிக்கக்கூட முடியாத நிலை உள்ளது. வாகனங்களை வீட்டுக்குள் பாதுகாப்பாக நிறுத்தாமல் வீதியில் நிறுத்தியதால்தான் இது நடந்தது என்று போலீசார் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். இதுபோல் வீட்டிலே சமைத்து சாப்பிடுவதை விட்டு ஓட்டலுக்கு போய் சாப்பிட்டதால் தானே வண்டி திருட்டுபோனது என்று சொன்னாலும் சொல்வார்களோ!

எனவே திருட்டு போன அனைத்து வாகனங்களுக்கும் புகார் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் இதுகுறித்து அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட வேண்டும். பொது இடங்களில் செயல்படாத நிலையில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை பராமரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். போலீசார் ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

கூடுதல் கவனம்

எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்ச்சியாக மோட்டார்சைக்கிள்களை குறி வைத்து திருடி வரும் மர்ம ஆசாமி களை பிடிக்கவும், திருட்டு போன வாகனங்களை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற சம்பவங்களைக் குறித்து புகார் பதிவு செய்வதை தவிர்ப்பதன் மூலம் குற்றங்களை மறைக்க முடியுமே தவிர குற்றங்களை குறைக்க முடியாது.

எனவே போலீசார் குற்றங்களை குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விவசாயி, வியாபாரி என பலதரப்பினரின் மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போன நிலையில் போலீசாரின் வாகனம் திருடப்பட்டால் தான் விசாரணை வேகமெடுக்குமோ என்ற கேள்விக்குறி பலரிடம் எழுந்து வருகிறது. போலீசார் முழு வீச்சில் செயல்பட்டு மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்