கடலூர்
குடும்ப பிரச்சினையில் விஷம் கலந்து கொடுத்ததாக தாய் மரண வாக்குமூலம்
|புவனகிரி அருகே, பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்த சிறுவன் சாவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினையில் விஷம் கலந்து கொடுத்ததாக தாய் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிதம்பரம்,
புவனகிரி அருகே சி.ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). இவருடைய மனைவி பரணி (24), இவர்களுக்கு இனியா (8), பரணிதரன் (6) என்று 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 18-ந்தேதி பரணி மற்றும் அவரது மகன், மகள் வீட்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டனர். அதன்பிறகு பலாப்பழமும் சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தாயும் சாவு
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்தான். பரணி, மகள் இனியா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதுபற்றி மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் பரணிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். முன்னதாக பரணி சிகிச்சையில் இருக்கும்போது, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இறப்பதற்கு முன்பாக, நடந்த விவரம் குறித்து போலீசில் அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார். அதாவது, குடும்ப பிரச்சினை காரணமாக எனக்கும், எனது கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த நான் குளிர்பானத்தில் விஷம் கலந்து மகன், மகளுக்கு கொடுத்து விட்டு நானும் குடித்தேன் என்று கூறியுள்ளார்.
பரபரப்பு
விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இனியாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதலில் பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்ததால், இறந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது விஷம் குடித்து தாயும், மகனும் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.