3 குழந்தைகள் பலியான சம்பவம்: தனிக்குடித்தனம் நடத்த வராததால் தற்கொலைக்கு முயன்றேன் - தாய் வாக்குமூலம்
|வாணாபுரம் அருகே 3 குழந்தைகளை தாய் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்ததில் 3 குழந்தைகள் இறந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 30), இவரது மனைவி அமுதா (27). இவர்களின் மகன்கள் நிலவரசு (5) குறலரசு (4), 7 மாத பெண் குழந்தை யாஷினி. நிலவரசு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அமுதா 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றுக்கு வந்தார். பின்னர் 3 குழந்தைகளையும் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் 3 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. உயிருக்கு போராடிய அமுதாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அமுதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
அமுதா தனது கணவரிடம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் செல்லலாம் என்று பலமுறை கூறியுள்ளார். இதற்கு அவரது கணவர் சம்மதிக்கவில்லை. இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்து அமுதா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று இடுப்பில் 3 குழந்தைகளையும் கட்டிக்கொண்டு தண்ணீரில் குதித்துள்ளார். இதில் 3 குழந்தைகளும் உயிரிழந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் என்னை காப்பாற்றி விட்டனர் என்று அமுதா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் பரசுராமன் கொடுத்த புகாரில் 3 குழந்தைகளையும் தண்ணீரில் மூழ்கி கொலை செய்த மனைவி அமுதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகளின் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் குழந்தைகளை நேற்று அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக தூக்கி சென்றனர். மேலும் 3 குழந்தைகளையும் அருகருகே வைத்து அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.