காதலுக்கு எதிர்ப்பு: கல் உப்பை பரப்பி மகளை முட்டிப் போட வைத்த தாய்
|ஒரு மர்ம கும்பல் தனது மகளை கடத்தி சென்றதாக குளச்சல் பகுதி காவல் நிலையத்தில் சுனிதா புகார் செய்துள்ளார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உப்பட்ட குளச்சல் பகுதியில் வசித்து வருபவர்கள் சுனிதா மற்றும் அவரது மகள் அமர்சியா. அமர்சியா பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, வீட்டிற்கு வந்த ஒரு மர்ம கும்பல் தனது மகளை கடத்தி சென்றதாக குளச்சல் பகுதி காவல் நிலையத்தில் சுனிதா புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய காவல் துறை, முதலில் தாய் சுனிதாவிடம் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என்று கேட்டபோது தனது மகள் ஒருவரை காதலிப்பதாகவும், அமர்சியாவை கடத்தியது அந்த பையனாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் விசாரணையில் அமர்சியாவின் காதலன் அதே பகுதியை சேர்ந்த டேனியல் ஆகாஷ் என்பவர் என தெரியவந்தது. ஆகாஷின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அங்கு அமர்சியா இருப்பதை கண்டனர்.
இந்நிலையில் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அங்கு சுனிதாவும் இருந்தார். விசாரணையின்போது அமர்சியா கூறியதாவது:-
" நான் ஆகாஷ் என்பவரை காதலிக்கிறேன். இதைப் பற்றி அறிந்த எனது தாயாருக்கு இதில் விருப்பம் இல்லை. அதனால் என்னை அறையில் அடைத்து வைத்து அடித்தார். மேலும் கல் உப்பை பரப்பி அதில் என்னை முட்டிப் போட வைத்து நடக்க செல்லி கொடுமைப்படுத்தினார். அதைப் பற்றி நான் எனது காதலனிடம் கூறினேன். அதன்பின்பு ஆகாஷின் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இதுபற்றி எனது வீட்டிற்கும் தகவல் தெரிவித்தேன்."
இவ்வாறு அமர்சியா கூறினார்.
உண்மையை அறிந்த காவல் அதிகாரி, அமர்சியா மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி காதலனுடன் செல்ல அனுமதி அளித்தார். மேலும், விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.