சென்னை
தரைப்பாலத்தில் கார் மோதி தாய்-மகன் சாவு: மனைவி படுகாயம்
|தரைப்பாலத்தில் கார் மோதி தாய்-மகன் பரிதாபமாக இறந்தனர். மனைவி படுகாயம் அடைந்தார்.
சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). இவர், தன்னுடைய மனைவி ராஜேஸ்வரி (40), தாய் கீதா (65) ஆகியோருடன் திருவண்ணாமலையில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை ரவிச்சந்திரன் ஓட்டி வந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 6 வழி சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. பிள்ளைச்சத்திரம் அருகே நெடுஞ்சாலையில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட தரைப்பாலத்தின் இருபுறமும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் வாகனங்கள் வலதுபுறமாக திரும்பிச்ெசல்ல வேண்டும்.
ஆனால் ரவிச்சந்திரன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் திரும்பாமல் நேராக சென்று, புதிதாக கட்டிய தரைபாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரவிச்சந்திரன், அவரது தாய் கீதா இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ரவிச்சந்திரனின் மனைவி ராஜேஸ்வரி படுகாயம் அடைந்தார். அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.