சென்னை
போலி பட்டாவை உருவாக்கி கொரட்டூர் ஏரி நிலம் அபகரிப்பு தாய்-மகன் கைது
|அரசுக்கு சொந்தமான கொரட்டூர் ஏரி நிலத்தை போலி பட்டா உருவாக்கி அபகரித்த தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் ராஜமாணிக்கம், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், அரசுக்கு சொந்தமான கொரட்டூர் ஏரி உள்வாய் இடத்தில் 1,316 சதுரடிக்கு போலியான பட்டா தயாரித்து சூளைமேட்டை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64), வில்லிவாக்கத்தில் வசிக்கும் அவருடைய மகன் சதீஷ் (39) ஆகிய 2 பேர் அபகரித்து உள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு குறித்து மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர் மேரிராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தாய், மகன் 2 பேரும் போலீசார் பிடியில் சிக்காமல் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ராஜகுமாரி, சதீஷ் ஆகிய 2 பேரும் சிக்கினார்கள். கைது செய்யப்பட்ட 2 பேரும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதே போன்று கொரட்டூர் ஏரியின் உள்வாய் பகுதியில் 1,326 சதுரடி இடத்தை ஜெயராமன் என்பவர் அவருடைய மகள் ராதா பெயரில் போலி பட்டா தயாரித்து, ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக வில்லிவாக்கம் சார் பதிவாளர் ஏற்கனவே அளித்துள்ள புகார் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.