பெற்ற மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய்...! - 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
|17 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறுமியின் தாய் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
சென்னை
திருச்சி திருச்சி மாநகரில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியை15 வயதில் திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கியுள்ளார். அன்று இரவில் ஒரு சிறுமியை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் இதுபற்றி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவே சென்று அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். பின்னர், சிறுமியிடமும், அந்த வாலிபரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை அவர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
மேலும் சிறுமி கூறிய விவரங்களை கேட்ட போலீசார் அதிர்ந்து போயினர்.
அதன்விவரம் வருமாறு:-
15 வயதில் திருமணம் துவாக்குடி பகுதியை சேர்ந்த அந்த சிறுமிக்கு தற்போது 17 வயது ஆகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய தந்தை இறந்துவிட்டார். இதனால் அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துவந்தார்.
கடந்த 7-4-2021 அன்று அவரை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மனோகர்-செல்லம்மாளின் மகன் பாலமுருகன் (29) என்பவருக்கு சிறுமியின் தாய் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அப்போது சிறுமிக்கு 15 வயது தான் ஆகியுள்ளது. பாலமுருகன் சிறுமியுடன் 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால், சிறுமியை குழந்தை உண்டாக வில்லை என்று பாலமுருகன், செல்லம்மாள், மனோகர் ஆகியோர் திட்டியதாக தெரிகிறது.
இதனால் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி தனது தாய் வீட்டுக்கு சிறுமி வந்துவிட்டார். இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் வாங்கிய கடனை அடைப்பதற்காக திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு 4-வது குறுக்கு சந்தில் வசித்து வரும் முத்து என்பவரின் மனைவி ரமீஜா பானு (50) என்பவரிடம் சிறுமியை வேலைக்கு அனுப்பியுள்ளார். ரமீஜா பானு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவந்துள்ளார்.
அதனால் அந்த சிறுமியையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். கடந்த மார்ச் மாதம் திருச்சிக்கு வந்த கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மலையன்விளையை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மகன் பிரபின் கிறிஸ்டல் ராஜ் திருச்சியில் உள்ள தங்கும் விடுதிக்கு அந்த சிறுமியை முதன்முறையாக அழைத்துச்சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதுபோல் 15 முறைக்கு மேல் பெயர் விவரம் தெரியாத வாடிக்கையாளர்களிடமும் ரமீஜாபானு அந்த சிறுமியை பாலியல் தொழிலுக்கு அனுப்பியுள்ளார். அப்போது, வேலை முடியும் வரை விடுதிக்கு வெளியே காத்திருந்து சிறுமியை ரமீஜா பானு கையோடு அழைத்துச்சென்றுள்ளார்.
மேலும் வாடிக்கையாளர்களிடம் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வாங்கும் ரமீஜாபானு, சிறுமிக்கு ரூ.1,000 மட்டுமே கொடுத்துள்ளார். மேலும் உடல்நிலை சரியில்லை என்று கூறினாலும், உனது வீடியோ எங்களிடம் உள்ளது என்று கூறி அவரை தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும் ரமீஜாபானுதான் பிரபின் கிறிஸ்டல்ராஜ் தங்கி இருந்த விடுதிக்கு சிறுமியை ஆட்டோவில் அழைத்துவந்து விட்டதாகவும் சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார்.
மேலும், சிறுமியுடன் இருந்த பிரபின் கிறிஸ்டல்ராஜிடம் விசாரித்த போது, அவர் கடந்த 15 ஆண்டுகளாக தொலைக்காட்சி நிறுவனங்களில் நிருபராக வேலை பார்த்து வந்ததும், தற்போது ஒரு மாதாந்திர பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும், ரமீஜா பானுவுடன் சேர்ந்து கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை அவர் சீரழித்ததும், அத்துடன், அந்த சிறுமியை அவர் கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
மேலும் இதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தை என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்ட போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் போலீசில் புகார் கொடுத்தார்
அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலமுருகன் மீதும், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபின் கிறிஸ்டல் ராஜ் மீதும், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ரமீஜாபானு மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் மற்றும் மாமனார், மாமியார் மீதும் போக்சோ, விபசார தடுப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிரபின் கிறிஸ்டல் ராஜ், ரமீஜாபானு, சிறுமியின் தாய் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.