< Back
மாநில செய்திகள்
அன்னை சத்தியவாணிமுத்து நூற்றாண்டு பிறந்தநாள்: அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

அன்னை சத்தியவாணிமுத்து நூற்றாண்டு பிறந்தநாள்: அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
10 Feb 2023 4:14 PM IST

அன்னை சத்தியவாணிமுத்து நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு 2023 பிப்ரவரி 15ஆம் நாள் ஆகும். அந்நாளை அரசு விழாவாகக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னை சத்தியவாணி முத்து அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். அதன்பின்னர் 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்தில் இருந்தே பேரறிஞர் அண்ணாவோடு அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

1957, 1967,1971 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமிழ்நாட்டில் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி அவர்தான். 1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய அமைச்சரவையிலும் அதன்பின்னர் 'சமத்துவப் பெரியார்' கலைஞர் அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியும் அவர்தான்.

1967 முதல் 1974 வரை அமைச்சராக அவர் செயல்பட்டார். 1979 ஆம் ஆண்டு திரு. சரண்சிங் பிரதமராக இருந்தபோது ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பேற்ற தமிழகத்தைச் சார்ந்த முதல் பெண்மணியும் அவரே ஆவார்.

இவ்வாறு, சட்டப்பேரவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், மாநில அமைச்சர், இந்திய ஒன்றிய அமைச்சர் என்ற பெருமைகளைப் பெற்ற முதல் தலித் பெண்மணி அவர்தான். இந்தித் திணிப்புக்கு எதிராகவும் ராஜாஜி அரசு கொண்டு வந்த குலக்கல்வி முறைக்கு எதிராகவும் போராடி சிறை சென்றவர்; ஆதிதிராவிட மக்களுடைய கல்வி மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்.

அன்னை என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தந்தை பெரியாரைப் போலவே புரட்சியாளர் அம்பேத்கரையும் தனது தலைவராக ஏற்றுப் போற்றியவர்.

இத்தகைய பல்வேறு பெருமைகளைக் கொண்ட அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் பங்களிப்பைத் தமிழ்நாடு அரசு உரிய வகையில் அங்கீகரித்து அவரது நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் மகளிர் கல்லூரி ஒன்றுக்கு அவரது பெயரை சூட்டவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்