< Back
மாநில செய்திகள்
3 குழந்தைகளின் தாய் உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி
திருச்சி
மாநில செய்திகள்

3 குழந்தைகளின் தாய் உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
20 Oct 2022 10:44 PM GMT

3 குழந்தைகளின் தாய் உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

லால்குடி:

உயர்மின் கோபுரத்தில் ஏறிய பெண்

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த தச்சங்குறிச்சியில் பொய்யூர் வழியாக தச்சங்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு 2.30 லட்சம் மெகாவாட் மின் திறன் கொண்ட மின்கம்பிகள் செல்லும் உயர் மின் கோபுரம் உள்ளது. நேற்று காலை இந்த உயர் மின் கோபுரத்தின் மீது ஒரு பெண் சரசரவென ஏறினார். கோபுரத்தின் உச்சிக்கு அருகே ஏறிய அந்த பெண், இரும்பு கம்பியில் அமர்ந்திருந்தார்.

அப்போது அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்த்தவர்கள் அதைக்கண்டு அந்த பெண்ணை கீழே இறங்கி வருமாறு சத்தம்போட்டனர். ஆனால் அந்த பெண் இறங்கி வரவில்லை. இதனால் அவர்கள் இது பற்றி குமுளூர் துணை மின் நிலையத்திற்கு தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இதையடுத்து மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக லால்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சுரேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், மின் கோபுரம் மீது ஏறி அமர்ந்திருந்த பெண்ணை கீழே இறங்கச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் சில தீயணைப்பு வீரர்கள் உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி, அந்த பெண் அருகே சென்றனர். பின்னர் அந்த பெண்ணிடம் பேசி, அவரை மீட்டு மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்க செய்தனர்.

3 குழந்தைகளின் தாய்

இதற்கிடையே சிறுகனூர் போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடம் அந்த பெண்ணை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் இலந்தைகூடம் பகுதியை சேர்ந்த செந்திலின் மனைவி திலகா(வயது 30) என்பதும், இவருக்கு 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து திலகாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்யும் நோக்கத்தில் மின்கோபுரத்தின் மீது ஏறினார் என்பது குறித்து சிறுகனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்