< Back
மாநில செய்திகள்
உணவு இல்லாமல் இறந்து அழுகிய நிலையில் கிடந்த மாமியார்-மருமகன்: 7 நாட்கள் பிணத்துடன் இருந்த தாய், மகன்...!
மாநில செய்திகள்

உணவு இல்லாமல் இறந்து அழுகிய நிலையில் கிடந்த மாமியார்-மருமகன்: 7 நாட்கள் பிணத்துடன் இருந்த தாய், மகன்...!

தினத்தந்தி
|
13 Feb 2023 8:46 AM IST

கோபியில் உணவில்லாமல் இறந்து, அழுகிய நிலையில் கிடந்த மாமியார்-மருமகன் உடல்களை புதைக்க பணம் இல்லாமல் 7 நாட்கள் பிணத்துடன் தாய், மகன் இருந்துள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் குமணன் வீதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 74). இவருடைய மனைவி சாந்தி (61). இவர்களுக்கு சசிரேகா (35) என்ற மகளும், சரவணக்குமார் (33) என்ற மகனும் உள்ளனர்.

இதில் சசிரேகா திருமணம் முடிந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தன்னுடைய கணவர் வீட்டில் வசித்து வருகிறார். சரவணக்குமார் உடல் நலம் சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இதனால் சரவணக்குமாரை மோகனசுந்தரமும், சாந்தியும் தங்களுடன் வைத்து பராமரித்து வந்தனர். மேலும் சாந்தியின் தாயார் கனகாம்பாளும் மோகனசுந்தரத்துடன் வசித்து வந்து உள்ளார். மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

இதன்காரணமாக மோகனசுந்தரம் குடும்பம் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்தது. அதுமட்டுமின்றி வயது முதுமை காரணமாக மோகனசுந்தரம், கனகாம்பாள் ஆகியோரின் உடல் நலம் குன்றியது. இதற்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. வருமானம் இல்லாததால் மோகனசுந்தரம், சாந்தி ஆகியோர் கோவில் மற்றும் வெளி இடங்களுக்கு சென்று இலவசமாக கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளனர்.

வயது முதுமையால் உடல் நலம் பாதிப்பு, வறுமை ஆகியவற்றால் அவர்கள் உண்ண உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்து உள்ளனர். இதனால் மோகனசுந்தரமும், கனகாம்பாளும் இறந்துவிட்டனர். மேலும், இறந்த உடல்களுடன் சாந்தி தனது மகனுடன் வீட்டிலேயே இருந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசியது. இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்்தனர். அப்போது அழுகிய நிலையில் மோகனசுந்தரம் மற்றும் கனகாம்பாளின் உடல் கிடந்்ததையும், அதன் அருகில் சாந்தியும், அவருடைய மகன் சரவணக்குமாரும் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இறந்தவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சாந்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்களை சாந்தி கூறினார். இதுகுறித்து போலீசாரிடம் சாந்தி கூறுகையில், 'வறுமை, உடல் நலம் பாதிப்பு, சரியான நேரத்தில் உணவு கிடைக்காமை போன்ற காரணத்தால் கடந்த 7 நாட்களுக்கு முன்பு மோகனசுந்தரமும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகாம்பாளும் இறந்து உள்ளனர்.

மேலும் இறந்தவர்களின் உடல்களை புதைக்க தன்னிடம் பணம் இல்லை. அதுமட்டுமின்றி இதுகுறித்து பக்கத்து வீட்டில் உள்ள யாரிடமும் கூறி உதவி கேட்க மனம் இல்லை. இதனால் நானும், எனது மகனும் இறந்த உடல்களுடன் இருந்துவிட்டோம்,' என்றதை கேட்டதும் போலீசார் கண்கலங்கினர்.

புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்களாக பிணத்துடன் பெண் மற்றும் அவருடைய மகன் இருந்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்