< Back
மாநில செய்திகள்
திருத்தணி அருகே கள்ளச்சாராயம் பதுக்கி விற்ற மாமியார், மருமகன் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி அருகே கள்ளச்சாராயம் பதுக்கி விற்ற மாமியார், மருமகன் கைது

தினத்தந்தி
|
15 May 2023 10:11 AM IST

திருத்தணி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்ற மாமியார், மருமகன் கைது செய்யப்பட்டனர். 60 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளச்சாராயம் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட காசிநாதபுரம் கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் காசிநாதபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காசிநாதபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த வேண்டா (வயது 45) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அவரது வீட்டின் பின்புறத்தில் பிளாஸ்டிக் பையில் 60 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து வேண்டா மற்றும் அவரது மருமகன் அருங்குளம் கண்டிகையைச் சேர்ந்த குருமூர்த்தி (வயது 22) ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

மாமியார், மருமகன் கைது

விசாரணையில், குருமூர்த்தி ஆந்திரா மாநிலம் மங்கலம் பகுதியில் இருந்து கள்ளச்சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து வேண்டாவிடம் கொடுத்து அப்பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், 60 லிட்டர் கள்ளச்சாராயம், 45 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து வேண்டா, குருமூர்த்தி ஆகிய இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆந்திர மாநில பகுதிகளிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவது தொடர் கதையாக உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, தமிழக எல்லைப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்