< Back
மாநில செய்திகள்
மகள் இறந்த 3-வது நாளில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை - வேலூர் அருகே சோகம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மகள் இறந்த 3-வது நாளில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை - வேலூர் அருகே சோகம்

தினத்தந்தி
|
7 July 2024 4:33 AM IST

வேலூர் அருகே மகள் இறந்து 3-வது நாளில் தாயும் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்,

வேலூர் அடுக்கம்பாறையை அடுத்த ஆற்காட்டான் குடிசையைச் சேர்ந்தவர் பாபு (49 வயது), லாரி டிரைவர். இவரது மனைவி தமிழரசி (39 வயது). இவர்களது மகள் அக்சயா (14 வயது). இவர்களுக்கு சென்னை ஆவடியில் சொந்தமாக வீடு உள்ளது. பாபு, குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். அக்சயா அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தினமும் பள்ளிக்கு சென்று வந்தாலும் சரியாக படிக்கவில்லை என தெரிகிறது. இதனால், அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அக்சயாவின் பெற்றோரை பள்ளிக்கு நேரில் வரவழைத்து அக்சயா மீது புகார் தெரிவித்தனர். இதனால் தமிழரசி, மகள் அக்சயாவை கண்டித்தார். பள்ளிக்கு சென்றால் ஆசிரியர்கள், வீட்டுக்கு வந்தால் பெற்றோர்கள் என மாறி, மாறி கண்டிக்கிறார்களே என விரக்தியடைந்த அக்சயா கடந்த 3-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சொந்த ஊரான ஆற்காட்டான் குடிசைக்கு 4-ந் தேதி கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கணவன்-மனைவி இருவரும் மகள் இறந்த துக்கத்தில் சென்னைக்கு செல்லாமல் ஆற்காட்டான் குடியிசையிலேயே இருந்தனர். அதேநேரம், தான் கண்டித்ததால் தான் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என தமிழரசி தினமும் பாபுவிடம் புலம்பி வந்தார். மனைவிக்கு பாபு ஆறுதல் கூறி வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழரசி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் இறந்து 3-வது நாளில் தாயும் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்