< Back
மாநில செய்திகள்
ஜீவனாம்சம் கோரிய வழக்கு: உயிரிழந்த மகளின் ஜீவனாம்ச பாக்கியை பெற தாயாருக்கு உரிமை உள்ளது - ஐகோர்ட்டு தீர்ப்பு
மாநில செய்திகள்

ஜீவனாம்சம் கோரிய வழக்கு: உயிரிழந்த மகளின் ஜீவனாம்ச பாக்கியை பெற தாயாருக்கு உரிமை உள்ளது - ஐகோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
29 April 2023 5:47 PM IST

உயிரிழந்த மகளின் ஜீவனாம்ச பாக்கியை பெற அவரது தாயாருக்கு உரிமை உள்ளது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த அண்ணாதுரை-சரஸ்வதி தம்பதியினர் கடந்த 2005-ம் ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில், ஜீவனாம்சம் கோரி சரஸ்வதி 2014-ம் ஆண்டு மதுராந்தகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை 2021-ம் ஆண்டு நிறைவடைந்து தீர்ப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, சரஸ்வதிக்கு மாதம் 7,500 ரூபாய் 2014-ம் ஆண்டு முதல் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என்று மதுராந்தகம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி ஜீவனாம்சம் தொகையான 6 லட்சத்தி 22 ஆயிரம் ரூபாயை கேட்டு சரஸ்வதி தாக்கல் செய்த மனு கோர்ட்டில் நிலுவையில் இருந்த சமயத்தில் அவர் உயிரிழந்துவிட்டார்.

இதனால் ஜீவனாம்ச பாக்கி கேட்டு சரஸ்வதி தொடர்ந்த வழக்கில் தன்னை இணைக்கும்படி சரஸ்வதியின் தாயார் ஜெயா, வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து சரஸ்வதியின் முன்னாள் கணவரும், ஜெயாவின் மருமகனுமான அண்ணாதுரை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவை விசாரித்து நீதிபதி சிவஞானம், இந்து வாரிசுரிமைச் சட்டம் 15-ன் படி, மனைவி இறந்தால் அவரது சொத்துக்கள் குழந்தைகளுக்கும், அதன் பிறகு கணவருக்கும், அதன் பிறகே பெற்றோருக்கும் வரும் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கை பொறுத்தவரை விவாகரத்தான தம்பதி என்பதால், கணவருக்கு மனைவியின் சொத்துக்கள் செல்லாது, அதனால் சரஸ்வதியின் தாயாருக்கு ஜீவனாம்ச பாக்கியை பெற உரிமை உள்ளது என்று தெரிவித்தார். எனவே ஜெயாவை இந்த வழக்கில் இணைத்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும் கூறி அண்ணாதுரை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.



மேலும் செய்திகள்