செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தாய்: மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை..!
|இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு, விவசாயி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் பிரதீபா (வயது 18). கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இ.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
வீட்டில் இருக்கும்போது பிரதீபா அடிக்கடி செல்போனில் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதைப்பார்த்து சித்ரா மகளை கண்டித்துள்ளார். இதனால் வேதனை அடைந்த பிரதீபா கடந்த மாதம் விஷம் குடித்துள்ளார்.
உடனே வீட்டில் இருந்தவர்கள் பிரதீபாவை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரதீபா பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீபா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.