< Back
மாநில செய்திகள்
குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்துக் கொன்று தாய் தற்கொலை
மாநில செய்திகள்

குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்துக் கொன்று தாய் தற்கொலை

தினத்தந்தி
|
30 Aug 2023 2:37 AM IST

குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்துக் கொன்றுவிட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே வடக்கநாடு புத்தன்வீட்டு விளையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது52). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஷீபா (41). இவர்களுக்கு கெவின் (15), கிஷான் (7) என 2 மகன்கள் இருந்தனர். 10 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர். கெவின், கிஷான் இருவருக்கும் கால்களில் பக்கவாத நோய் பாதிப்பு இருந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நோய் சரியாகவில்லை. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ஏசுதாசுக்கும், ஷீபாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஏசுதாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த ஷீபா தனது 2 மகன்களுடன் வீட்டின் கதவை அடைத்து விட்டு தூங்க சென்றார்.

மகன்களை கொன்று தற்கொலை

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஷீபாவின் வீட்டில் இருந்து குபுகுபுவென கரும்புகை வந்தது. மேலும் 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என அலறல் சத்தமும் கேட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஷீபாவும், அவருடைய மகன்களும் படுக்கையில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதற்கிடையே தகவலறிந்து திருவட்டார் போலீசாரும் அங்கு வந்தனர். அத்துடன் இரவில் வெளியே சென்றிருந்த ஏசுதாசும் தகவல் கிடைத்து அலறியடித்து கொண்டு ஓடிவந்தார்.

பின்னர் அனைவரும் சேர்ந்து தீயில் கருகி கிடந்த தாய்-மகன்களை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளைய மகன் கிஷான் பரிதாபமாக இறந்தான். ஷீபா மற்றும் மூத்த மகன் கெவின் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

காரணம் என்ன?

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மகன்களுக்கு நோய் இருந்ததால் ஷீபா மிகுந்த மன வேதனையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதையடுத்து கணவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

இது ஷீபாவுக்கு மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அதே நேரத்தில் தான் சென்று விட்டால் மகன்கள் இருவரும் அனாதையாகி விடுவார்கள் எனக்கருதி அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்ல நினைத்தார். இதனால் தூங்கி கொண்டிருந்த மகன்கள் மீது மண்எண்ணெய்யை ஊற்றி எரித்து கொன்று விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

குடும்பத்தகராறில் 2 மகன்களை எரித்து கொன்று தாயும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்