திருச்சி
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
|குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயன்றார்.
காட்டுப்புத்தூர்:
மாயமான கணவர்
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் அருகே உள்ள பெரியபள்ளிபாளையத்தை சேர்ந்தவர் சிங்காரவேல். டிரைவர். இவரது மனைவி சோனியா(வயது 28). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் மதுசூதனன், திருநிலா என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் வீட்டை விட்டுச்சென்ற சிங்காரவேல் 20 நாட்களாக வீடு திரும்பவில்லை என்று சோனியா காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி சிங்காரவேலை கண்டுபிடித்த போலீசார், கடந்த 8-ந் தேதி சிங்காரவேல் மற்றும் சோனியா ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விஷம் கொடுத்தார்
அப்போது சோனியா மற்றும் குழந்தைகளை தன்னுடன் அழைத்து செல்ல சிங்காரவேல் கால அவகாசம் கேட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் சிங்காரவேல் தன்னுடன் சேர்ந்து வாழமாட்டார் என்று சோனியா கருதியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர், தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததோடு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அக்கம், பக்கத்தினர் குழந்தைகளையும், சோனியாவையும் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் 3 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக சோனியாவின் தாய் சுந்தரி காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சோனியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை பிரிந்து வாழ்ந்ததாகவும், இதேபோல் சிங்காரவேலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்ததாகவும், பின்னர் சோனியாவும், சிங்காரவேலும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.