சென்னை
தாய் மற்றும் தம்பியும் கைது: மூதாட்டியை கொலை செய்தது ஏன்? கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்
|தரமணியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ெகாலை செய்தது ஏன் என கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் அவருடைய தாய் மற்றும் தம்பியும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தரமணி எம்.ஜி.நகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது 68). வீட்டில் தனியாக வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த ரூ.3½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் மூதாட்டியை கொன்று, நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என போலீசார் கருதினர்.
இது குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வெளியாட்கள் யாரும் வீட்டிக்குள் வந்து சென்றதாக அதில் பதிவாகவில்லை.
சாந்தகுமாரி வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வந்த ஒரு குடும்பம் நேற்று முன்தினம்தான் வீட்டை காலி செய்து விட்டு சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீஷா (21) என்ற பெண்ணிடம் விசாரித்தபோது அவர்தான் மூதாட்டியை கொன்று பணத்தை கொள்ளையடித்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான இளம்பெண் ஸ்ரீஷா, போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மூதாட்டி சாந்தகுமாரியுடன் எங்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் வீட்டை காலி செய்யும்படி சொல்லி விட்டார். வீட்டை காலி செய்ய சொன்னதால் எங்களுக்கு சாந்தகுமாரி மீது கடும் கோபம் ஏற்பட்டது. அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என முடிவு செய்தோம்.
நேற்று முன்தினம் வீட்டை காலி செய்து விட்டு சாந்தகுமாரி வீட்டுக்குள் நானும், எனது 18 வயதான தம்பியும் சென்றோம். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் சாந்தகுமாரியை கீழே தள்ளி விட்டு, அவரது கழுத்தை துப்பாட்டாவால் இறுக்கி கொன்றோம். பின்னர் பீரோவில் இருந்த ரூ.3½ லட்சத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்ரீஷாவின் 18 வயது தம்பி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த இவர்களுடைய தாயார் மேரி (40) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான 3 பேரிடம் இருந்தும் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மீட்கப்பட்டது. மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.