< Back
மாநில செய்திகள்
நிலத்தை மீட்டு தரக்கோரி  தாய், மகன் தீக்குளிக்க முயற்சிகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
சேலம்
மாநில செய்திகள்

நிலத்தை மீட்டு தரக்கோரி தாய், மகன் தீக்குளிக்க முயற்சிகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
31 Jan 2023 3:13 AM IST

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் வீட்டு மனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 353 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் கார்மேகம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 59 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

தீக்குளிக்க முயற்சி

வீராணம் பகுதியை சேர்ந்தவர் மோகனா. இவருடைய மகன் கோவிந்தராஜ். இருவரும் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர் திடீரென்று உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களிடம் இருந்த டீசல் கேனை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தை உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் சேர்ந்து அபகரித்துக்கொண்டனர். அந்த நிலத்தை மீட்டுத்தரும்படி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் நிலத்தை பறித்துக்கொண்டவர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர வேண்டும். பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏலச்சீட்டு நடத்தி மோசடி

மேலும் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கிச்சிப்பாளையத்தில் 2 பேர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அவர்களிடம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் என சீட்டு கட்டி வந்தோம். கடந்த டிசம்பர் மாதம் கட்டிய பணம் திரும்ப தர வேண்டும். இதையடுத்து ஏலச்சீட்டு நடத்தியவர்களை சந்திக்க சென்ற போது அவர்கள் வீட்டை காலி செய்து விட்டுசென்றது தெரியவந்தது. அதன்படி லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டு 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். எனவே அவர்களை கண்டுபிடித்து கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்