விழுப்புரம்
தாயும், மகளும் அரசு உதவி கேட்டு கலெக்டரிடம் மனு
|எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற தாயும், மகளும் அரசு உதவி கேட்டு கலெக்டரிடம் மனு
விழுப்புரம்
திண்டிவனத்தை அடுத்த கீழ்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் மனைவி கிருஷ்ணவேணி (வயது 32). இவருக்கு கவிதா, குணசுந்தரி, நிவேதா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் கவிதா, தாதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். கிருஷ்ணவேணிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் அவர் தனது மகள் கவிதாவுடன் சேர்ந்து படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் எழுதினார். இதன் தேர்வு முடிவு வெளியானதில் மாணவி கவிதா 500-க்கு 292, அவரது தாய் கிருஷ்ணவேணி 206 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மகள் கவிதாவுடன் வந்த கிருஷ்ணவேணி, மாவட்ட கலெக்டரை சந்தித்து தனக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கக்கோரியும், தனது குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் எனது மகளின் மேல்படிப்புக்கு உதவி செய்யுமாறும் கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.