சென்னை
பெரும்பாக்கத்தில் டி.வி. மெக்கானிக் வெட்டிக்கொலை - பழிக்குப்பழி வாங்குவதாக அப்பாவியை கொன்றது அம்பலம்
|பெரும்பாக்கம் பகுதியில் யாரோ தாக்கியதற்காக பழிக்குப்பழி வாங்குவதாக நினைத்து அப்பாவியான டி.வி.மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் 'சி' பிளாக்கை சேர்ந்தவர் ராஜா (வயது 39). டி.வி. மெக்கானிக். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு ராஜா வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது எழில் நகர் 'ஏ' மற்றும் 'பி' பிளாக்கை சேர்ந்த கோபி (24), அவருடைய நண்பர்களான பப்புலு, டியோ சத்யா, சீனு, அஜித்குமார், செல்லா ஆகியோர் குடிபோதையில் அங்கு நின்று பேசி கொண்டு இருந்தனர்.
அந்த வழியாக வந்த ராஜாவிடம், இவர்கள் வீண் வம்பு செய்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. உடனே கோபி உள்பட 6 பேரும் சேர்ந்து ராஜாவை கற்களால் தாக்கியதுடன், கத்தியால் தலையில் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ராஜா, வலி தாங்க முடியாமல் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை கண்டதும் 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பொதுமக்கள் 6 பேரையும் விரட்டிச்சென்று கற்களால் தாக்கினர். இதில் கோபி மட்டும் படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்ற 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த பெரும்பாக்கம் போலீசார் பலத்த வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிய ராஜா மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த கோபி இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். கோபி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு டியோ சத்யாவை 'சி' பிளாக்கை சேர்ந்தவர்கள் தாக்கி உள்ளனர். இதற்கு பழிக்குப்பழி வாங்க தனது நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்து அங்கு வந்த ராஜாவிடம் வேண்டும் என்றே தகராறு செய்து கொலை செய்தது தெரியவந்தது.
டியோ சத்யாவை யாரோ தாக்கியதற்கு, பழிக்குப்பழி வாங்குவதாக நினைத்து அதே பகுதியை சேர்ந்த அப்பாவியான ராஜாவை வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தப்பி ஓடிய 5 பேரில் பெயிண்டரான அஜித்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது மாமல்லபுரம் போலீசில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கோபி மீதும் மாமல்லபுரம் மற்றும் பள்ளிக்கரணை போலீசில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பப்புலு உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.