< Back
மாநில செய்திகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தனர்
சென்னை
மாநில செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தனர்

தினத்தந்தி
|
2 April 2023 2:17 PM IST

தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி, அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

கொரோனா தொற்று இருந்த போது முகக்கவசம், தனி மனித இடைவெளி போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது மிக அவசியமான ஒன்றாக இருந்தது. அப்போது இதனை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அதற்கு முன்பே பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதையும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவதையும் தவிர்த்தனர். கொரோனா நோய்த்தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்ததால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இதனால் முகக்கவசம், தனி மனித இடைவெளி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போனது.

இந்த நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கத்தில் இருந்த நோய்த் தொற்று, இப்போது 3 இலக்கத்தை நோக்கி செல்கிறது. அதாவது, நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் 123 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதிலும் குறிப்பாக துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள் மூலம் நோய்த்தொற்று பரவுவதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் நடவடிக்கை என்றாலும், தற்காப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவதை தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்பட 11 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மருத்துவ கட்டமைப்புகளுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதன்படி, நேற்று முதல் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் முகக்கவசம் கட்டாயம் என்பது வலியுறுத்தப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் நேற்று பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்து வந்திருந்ததை பார்க்க முடிந்தது. டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஓரளவுக்கு அணிந்திருந்தனர். சிலர் அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாதது போலவே இருந்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரையில், முகக்கவசம் அணிந்திருப்பதை அரிதிலும் அரிதாகவே பார்க்க முடிந்தது. அதிலும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மருத்துவமனை உயர் அதிகாரிகள், டாக்டர்களே இதில் அலட்சியமாக இருந்தனர். இந்த உத்தரவுகளை ஆஸ்பத்திரியில் யார் பிறப்பிப்பது? என்பதில் கூட அங்கு பிரச்சினை இருப்பதாக பணியாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. இவர்களே இப்படி இருக்கும் போது, நோயாளிகள், பார்வையாளர்கள் எப்படி முககவசம் அணிவார்கள்? என முகக்கவசம் அணிந்து வந்தவர்களில் பலர் பேசினர்.

இதேபோல், ராயப்பேட்டை, ஸ்டான்லி, ஓமந்தூரார் பன்னோக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள், நர்சுகள், பார்வையாளர்கள், நோயாளிகள் பலர் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். அமைச்சர் கூறியதுபோல 100 சதவீதம் முககவசம் அணிவதை உறுதிசெய்ய வேண்டும் என்றால் உத்தரவுகளை இன்னும் கடுமையாக்க வேண்டும், அலட்சியமாக இருக்கும் சிலரால் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்