< Back
மாநில செய்திகள்
ஆயுதபூஜை விழாவுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மதுரை மல்லிகை வரத்து- ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை
மதுரை
மாநில செய்திகள்

ஆயுதபூஜை விழாவுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மதுரை மல்லிகை வரத்து- ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை

தினத்தந்தி
|
22 Oct 2023 1:41 AM IST

ஆயுத பூஜை விழாவுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மதுரை மல்லிகை வரத்து இருப்பதால் நேற்று கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.


மதுரை மல்லிகைப்பூக்கள்

மதுரை மற்றும் அக்கம்பக்கத்து மாவட்டங்களில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. அதிலும் மல்லிகைப்பூக்கள் சாகுபடி, இந்த பகுதிகளில் சிறப்பு வாய்ந்தது. அங்கு விளையும் பூக்கள் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. தனி சிறப்பு பெற்ற மதுரை மல்லிகைப்பூக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே விழா நாட்கள், முகூர்த்த தினங்களில் மல்லிகை விலை கணிசமாக உயரும். கடந்த சில வாரங்களாக அதிக வரத்து காரணமாக மல்லிகைப்பூவின் விலை குறைவாகவே இருந்தது. அதாவது ஒரு கிலோ ரூ.500, ரூ.600 என இருந்தது. மற்ற பூக்களின் விலையும் குறைவாக இருந்தது. இந்தநிலையில் விஜயதசமி, ஆயுதபூஜையை முன்னிட்டு, மல்லிகை பூக்கள் விலை சற்று உயர்ந்தது.

விலை விவரம்

அதன்படி நேற்று மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது. மற்ற பூக்களான முல்லை ஒரு கிலோ ரூ.500 ரூபாய்க்கும், பிச்சி ரூ.600, சம்பங்கி ரூ.250, செண்டுமல்லி ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, செவ்வந்தி ரூ.250, மரிக்கொழுந்து ரூ.150, அரளி ரூ.400, ரூ.500 என விற்பனையானது. பூக்களின் தேவை இருப்பதால் பல இடங்களில் இருந்து வியாபாரிகள் நேற்று ஏராளமானோர் வந்து பூக்கள் வாங்கிச்சென்றனர். இதனால் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலையில் பெரிய மாற்றமில்லை. இன்றும், நாளையும் விலை அதிகரிக்கலாம். ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த ஆண்டு ஆயுதபூஜையையொட்டி மல்லிகை பூக்கள் வரத்து அதிகமாக இருந்ததால் விலையில் அதிகப்படியான உயர்வு இல்லை. மழை மற்றும் பனிப்பொழிவை பொறுத்து வரும் நாட்களில் விலையில் மாற்றம் ஏற்படும் என்றனர்.

மேலும் செய்திகள்