திருவள்ளூர்
சுபமுகூர்த்த தினம் திருத்தணி முருகன் கோவிலில் 70-க்கும் மேற்பட்ட மணமக்கள் சாமி தரிசனம்
|சுப முகூர்த்த தினத்தையொட்டி நேற்று திருத்தணி முருகன் கோவிலில் 70-க்கும் மேற்பட்ட மணமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாகும். திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்தால் சிறப்பு என்பதால் முகூர்த்த நாட்களில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறும். முகூர்த்த நாட்களில் திருத்தணி முருகன் கோவில் மற்றும் தனியார் மண்டபங்கள் நிரம்பி வழி யும்.
இந்த நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் மலை மீது உள்ள முருகன் கோவில் மண்டபத்திலும், அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபங்களில் 70-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. நேற்று மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தில் மட்டும் 18 திருமணங்கள் நடைபெற்றது.
திருத்தணி நகரத்தில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. திருத்தணி முருகன் கோவில் மற்றும் தனியார் மண்டபங்களில் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, காஞ்சீபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜோடிகள் திருமணம் செய்வதற்காக தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்திருந்தனர்.
நேற்று ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட மணமக்கள் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனால், பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.