< Back
மாநில செய்திகள்
பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார்

தினத்தந்தி
|
25 Jun 2023 1:25 AM IST

பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார்

ஒப்பிலியப்பன் கோவிலில் வருகிற 29-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் கூறினார்.

குடமுழுக்கு

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் விமானங்கள், கோபுரங்கள், பிரகாரங்கள், சிறு- சிறு சன்னிதிகள் ஆகியவை ரூ.3½ கோடியில் புனரமைத்து திருப்பணி வேலைகள் அனைத்தும் நிைறவடைந்துள்ளன. இதையடுத்து வருகிற 29-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வெங்கடாசலபதி கோவிலுக்கும், வடக்கு வீதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலுக்கும் குடமுழுக்கு நடைபெறுகிறது.

முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை ஹோமங்கள் தொடங்கி, 8.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று 10 மணிக்குள் விமான குடமுழுக்கும், மூலவர் குடமுழுக்கும் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு பெருமாள் தாயார் தங்க கருடசேவையுடன் பெரியாழ்வார் நிகமாந்த மகாதேசிகன் திருவீதி புறப்பாடு நடக்கிறது.

ஆய்வு

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 29-ந்தேதி நடக்கும் குடமுழுக்கு விழாவில் 20ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு வி.ஏ.ஓ. நகர், அங்காளம்மன் கோவில், நாகநாதசுவாமி கோவில், பிரத்தியங்கிராதேவி கோவில் என நான்கு புறமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகை திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 25 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.

200-க்கும் மேற்பட்ட போலீசார்

4 இடங்களில் சுகாதாரத்துறை மூலம் முகாம் அமைக்கப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குடமுழுக்கு நடக்கும் போது கோவிலுக்குள் 1000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் பொதுமக்களும், பக்தர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். மதியம் 12 மணிக்கு மேல் அனைவரும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 29-ந்தேதி முழுவதும் தரிசனம் செய்யலாம். நிலமாலை, வஸ்திரம் சாத்துதல், அர்ச்சனை ஆகியவை கிடையாது. சாமி தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

அன்னதானம்

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநாகேஸ்வரத்தில் இயங்கி வரும் 2 அரசு மதுபான கடைகளை 28,29-ந்தேதிகளில் மூடுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை பூமி தேவி திருமண மண்டபத்தில் அன்னதானம் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்