< Back
மாநில செய்திகள்
லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு 7  எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது
மாநில செய்திகள்

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு 7 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

தினத்தந்தி
|
13 Sept 2022 2:01 PM IST

அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை

இன்று காலை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார். இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதி உள்ளது என விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில்அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்ப்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சோதனையை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த

எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் போலீசார் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவரது ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் வேலுமணி வீட்டிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து, அதிமுகவின் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட நூற்றுக்கணக்கான தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

லஞ்ச ஒழிப்புதுறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

அம்மன் அர்ச்சுனன் , பி.ஆர்.ஜி அருண்குமார் , தாமோதரன் , கந்தசாமி , அமுல்கந்தசாமி , கே.ஆர்.ஜெயராம் , ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் போலீசார் குண்டுகட்டாக கைது செய்துள்ளனர்.

இதே போல போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்